தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் -கே.பி.முனுசாமி
தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்வது ஆரோக்கியமானது அல்ல என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு இன்று தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்வது ஆரோக்கியமானது அல்ல இதனால் அரசு அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்படும். தற்போது பாஜக அரசு, மத்திய அரசு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்து உள்ளோம் என தமிழகத்தில் ஆய்வு செய்து சொல்கிறார்கள்.
ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, இதுபோன்று துருப்புச் சீட்டை எடுத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமாக இருக்காது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதுபோன்று கீழே இறங்கி வரவில்லை என தெரிவித்துள்ளார்.