சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
சிலர் சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் நேற்று ஆறுதல் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
அதன்பிறகு அங்கு பேசிய அவர், விஜயை மறைமுகமாக விமர்சித்ததாக தெரிகிறது. அங்கு பேசிய திருமாவளவன் ” 10 வருடங்கள் தேர்தல் அரசியல் வராமல் மொத்தத்தில் 35 ஆண்டுகள் ஒரு மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கே பெரும்பாடு பட நேர்ந்தது. சிலபேர் 50 -60 வயது வரவேண்டும் அதுவரை சினிமாவில் நடிச்சி புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசாக வாழ்ந்துவிட்டு இளமை காலத்தையெல்லாம் சொகுசாக கழித்துவிட்டு தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டு காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள்.
அப்படி வருபவர்கள் ஊரு ஊராக சென்று இப்படி அலையவேண்டியது இல்லை. ஊரு ஊராக சென்று கொடியேற்ற தேவையில்லை. ஊரு ஊராக சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் பேசவேண்டியது இல்லை. உடனடியாக கட்சியை தொடங்கலாம் அதன்பிறகு ஆட்சிக்கு போகலாம் என நினைக்கிறார்கள். நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் ..தூங்கவேண்டிய நேரத்தில் சரியாக தூங்காமல் நான் 35 ஆண்டுகள் உழைத்த பிறகே விசிக அங்கீகாரம் பெற்ற கட்சியாய் மாறியிருக்கிறது” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் திருமாவளவன் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகரும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை அரசியல் வல்லுனர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள். கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது ” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.