இந்த மனுக்களை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் -உயர் நீதிமன்றம்
பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது மகனிடமிருந்து பராமரிப்பு தொகை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு தாய் தந்தைக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மகன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கூறும் வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரிக்க முடியும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு 2014 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளதற்கு அதிருப்தி தெரிவித்தார். மேலும் பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இடைக்கால உத்தரவு எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி மகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென்றும், மேலும் கால அவகாசம் நீட்டிக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.