இந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – ஓபிஎஸ்
17 ஆண்டுகளுக்கும் மேலாக கொசு ஒழிப்புப் பணியை மேற்கொண்டு வரும் கொசு ஒழிப்பு களப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வம் பெற வேண்டுமெனில் புறத்தூய்மை இன்றியமையாதது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த புறத்தூய்மை பணியை மேற்கொள்வதிலும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதிலும் கொசு ஒழிப்பு களப் பணியாளர்களின் பங்கு மகத்தானது. ஆனால், இவர்களின் கஷ்டங்கள் களையப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், காலரா போன்ற நோய்கள் உருவாவதற்கு காரணம் கொசுக்கள். இந்தக் கொசுக்களை ஒழித்துக் கட்டுவதற்காக 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் கொசு ஒழிப்பு களப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர்.
கொசு ஒழிப்பு களப் பணியாளர்களின் சேவையினையும், அவர்கள் நீண்ட நாட்கள் தற்காலிகமாக பணி புரிந்து வருவதையும், அவர்களுடைய ஏழ்மைத் தன்மையினையும் கருத்தில் கொண்டு, அனைத்து கொசு ஒழிப்பு களப்பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்கும் மேலாக கொசு ஒழிப்புப் பணியை மேற்கொண்டு வரும் கொசு ஒழிப்பு களப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்தல் pic.twitter.com/8GqLNQ8GFJ
— O Panneerselvam (@OfficeOfOPS) May 23, 2023