நாட்டில் இந்த 2 கொடிகள் தான் உயரே பறந்து கொண்டிருக்கிறது – ப.சிதம்பரம்
நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரண்டும் தான் உயரே கொடி பறந்து கொண்டிருக்கிறது என ப.சிதம்பரம் விமர்சனம்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவர்கள் நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் தொடங்கியுள்ள பாதயாத்திரையை கொச்சைப்படுத்துகின்றனர்.
ஆனால் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் காங்கிரஸ் தலைமையில் தான் நடைபெற்றது. பாதை யாத்திரையை கொச்சைப்படுத்துபவர்களுக்கு, வெள்ளையனே வெளியேறு என்பதிலும் ஆர்வமில்லை, இந்தியாவை ஒற்றுமை படுத்த வேண்டும் என்பதிலும் ஆர்வம் கிடையாது. இதன் மூலம் யார் பிளவுசக்தி என்பது தெளிவாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் தமிழகத்தில் குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் குற்றங்கள் அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் இல்லை. எனவே குற்றங்கள் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பொருளாதாரத்தை பற்றி சற்றும் கவலைப்படாமல் தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றி வருவதால் தற்போது பொருளாதார பலவீனம் ஆகியுள்ளது. இந்த சூழல் நிலவினால் இலங்கையை போன்று தான் இந்தியாவும் தடுமாற வேண்டிய சூழல் ஏற்படும்.
நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரண்டும் தான் உயரே கொடி பறந்து கொண்டிருக்கிறது. இந்த கொடியை தான் பிரதமரும் நிதியமைச்சரும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என விமர்சித்துள்ளார்.