அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது…என்கிட்ட அதுக்கு ரகசியம் இருக்கு – ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. ஏனென்றால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி அதிமுக குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்கிற வகையில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் கட்சியை ஒன்றிணைக்க 3 ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஆனால், என்னுடைய இந்த முயற்சியில் சிலர் தடையாக இருக்கிறார்கள்.
ஆனாலும், அனைவரும் ஒன்றிணையும் காலம் வெகுதூரத்தில் இல்லை. வரும் காலம் தேர்தல் காலம். சில ரகசியங்கள் இருக்கின்றன. ஆனால், அதனை இப்போது பகிரும் சூழலில் இல்லை. காலம் கனிந்து கொண்டு இருக்கிறது விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. ஏனென்றால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார்.
இனிமேல் இந்த இயக்கம் தொடர்களுக்காக மட்டுமே இயங்கும். அதற்காக தான் நாங்கள் இப்போது போராடி கொண்டு இருக்கிறோம். கட்சியில் பதவிக்கு ஆசைப்படாமல் தொண்டர்கள் பலரும் வேலை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக்கொள்வது நமக்கான காலம் வெகு தூரம் இல்லை. வந்து கொண்டு இருக்கிறது” என பேசினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிறகு பேசிய அவர் ” அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்று தான் கூறுகிறோம். அதே சமயம் , எங்கள் சார்பாக பெட்டிஷன் போடவில்லை. ஆனால், எங்களை மிகவும் இளக்காரமாக பேசுகிறார்கள். ஒற்றை தலைமை வந்தபின் 11 தேர்தகளில் தோல்வியடைந்துள்ளார் எனவும், 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக, தற்போது தேர்தலை சந்திக்கவே முடியாத தலைமையில் உள்ளது” எனவும் ஓ.பன்னீர்செல்வம் பேசிவிட்டு சென்றார்.