நடப்பாண்டில் பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் இருக்காது – திண்டுக்கல் லியோனி
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலித்து ஓராண்டாகிறது என திண்டுக்கல் லியோனி பேச்சு.
பள்ளி பாடத்திட்டங்கள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் திராவிட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்க பரிந்துரைகள் வந்துள்ளன. பாடத்திட்டத்தை வடிவமைக்கும் மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு பரிந்துரைகள் வரப்பட்டுள்ளன. முதலமைச்சர், கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஒப்புதல் வழங்கினால் 2023 – 24 கல்வியாண்டில் பாடபுத்தகத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவித்த அவர், நடப்பாண்டில் பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு, கலைஞரின் குறளோவியம் உள்ளிட்ட நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலித்து ஓராண்டாகிறது எனவும் கூறினார்.