காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது – முதல்வர் மு.க ஸ்டாலின்

Default Image

இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில்.

இன்று நடைபெற்று வரும் சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டியிருந்தது. இன்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில், அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகத் குற்றசாட்டினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்தியிருக்காது என கூறி, இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என பதிலளித்தார்.

இதுகுறித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது என கூறினார்.

புதிதாகத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், மீண்டும் அதே பெயரில் செயல்பட வேண்டும் என்றும் அன்பழகன் கோரிக்கை வைத்தார். ஆனால், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்