குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!
குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
நீர்நிலைகள் அனைத்திலும் நடைபெறக்கூடிய குடிமராமத்து பணிகளில் முழு விபரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பில் இது குறித்த கேள்வி எழுப்பியுள்ளனர். குடிமராமத்து பணிகள் விபரங்களை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகள் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் பார்க்க இயலாது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள் தற்பொழுது வரை எத்தனை குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளது எனவும், நடைபெற்று வரக்கூடிய பணிகளின் நிலை என்ன என்பது குறித்தும் அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டதுடன், குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.