“சாலையில் தண்ணீர் நிற்காமல் இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை.!” இபிஎஸ்-க்கு உதயநிதி பதில்.!
வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட இபிஎஸ்-க்கு, "சாலைகளில் தண்ணீர் நிற்காமல் இருக்கிறதே இதுதான் வெள்ளை அறிக்கை " என உதயநிதி பதிலளித்துள்ளார்.
சென்னை : வடகிழக்கு பருவமழை , வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்றும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது.
கனமழை பெய்தவுடன் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு , மருத்துவ சேவைகளை மாநகராட்சி ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
இபிஎஸ் அறிக்கை :
கனமழை, சாலைகளில் தேங்கிய மழைநீர் , பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இன்னும் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பொதுமக்களுக்கு உதவிகள் இன்னும் சரியாக செல்லவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் திமுக அரசு 2021-ல் பொறுப்பேற்றது முதல் தற்போது வரையில் சென்னையில் மேற்கொண்டுள்ள வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள்,… pic.twitter.com/ORY7yhkXBJ
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 15, 2024
உதயநிதி ஸ்டாலின் பதில் :
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” சென்னையில் நேற்று மிக அதிகனமழை நேற்று பெய்தது. தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி அவரின் ஆலோசனையின் பெயரில், அனைத்து துறை அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்களும் மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.
சாலைகளில் தண்ணீர் நிற்காமல் இருக்கிறதே., இதுவே வெள்ளை அறிக்கை தான். இன்று லேசான மழை தான் பெய்து வருகிறது. கனமழை பெய்தாலும் அதனை நாங்கள் சமாளித்துவிடுவோம். இந்த கனமழை சூழலில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்க அனைவருக்கும் நன்றி.” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.