அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நீட் தேர்வு இருக்க கூடாது – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!
திமுக சார்பில் நீட் தேர்வை கண்டித்து இன்று காலை 9 மணியிலிருந்து தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதைபோல், விழுப்புரம், நகராட்சி திடலில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து மாணவர் அணி, இளைஞர் அணி , மருத்துவர் அணி ஆகிய அணிகளின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இப்பொழுது ஒன்பது மணிக்கு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.
நம்மளுடைய விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக எங்கே கிட்டத்தட்ட 8,000 மேற்பட்ட மாணவர்கள் இளைஞர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு கூடாது என்பது எங்களுடைய கொள்கை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் கலைஞர் இருந்தபோது இந்த நீட் தேர்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தில் அதே நுழையவிடாமல் தடுத்தது முதலமைச்சர் கலைஞர் தான். இதனை மாற்றவும் முடியாது மறுக்கவும் முடியாது.
அதற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சியில் கூட தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது இருக்கிற ஏதோ நடத்தி கொண்டிருக்கும் அவருடைய காலத்தில் தான் நீட் தமிழகத்தில் மீண்டும் நுழைந்தது. தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் எல்லாம் ஒன்றிய அரசு உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது . இதன் காரணமாக மட்டும்தான் தமிழக முதலமைச்சர் எங்களை போராட்டம் செய்ய கூறி இருக்கிறார்.
இந்தப் போராட்டத்தை ஒன்றிய அரசில் இருக்கின்ற குடியரசுத் தலைவர் மட்டுமில்லை பிரதமருடைய காதிலே ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் . இதற்கு பிறகு அவர்கள் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் அடுத்த கல்வியாண்டில் இருந்து நீட் தேர்வு இருக்கக்கூடாது. அதற்கான முதல் முயற்சிதான் இன்று இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் அறிவித்திருக்கிற இந்த உண்ணாவிரத போராட்டம். இதற்கு மேலும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் இன்னும் போராட்டம் தொடரும்” எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.