30 ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவத்தில் மாற்றம் கூடாது! “மோடி உறுதியளிக்கணும்”…முதல்வர் பேச்சு!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை மேலும் 30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தி.மு.க, திராவிடர் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்), வி.சி.க, அ.தி.மு.க, தவெக, உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்காரணமாக அதனை உணர்த்துவதற்காக தான் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற கத்தி தென் மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. எனவே, தமிழ்நாடு எதிர்கொள்ளும் இந்த முக்கியமான பிரச்னைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது என்றால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது.
அதனை கருத்தில் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு இருக்கக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும். நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், தொகுதி மறுசீரமைப்பிற்கு தமிழ்நாடு எதிரானது இல்லை ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. ஏனென்றால், இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிகை உயர்த்தப்பட்டால், தற்போது இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை இருக்கிறதோ, அதே விகிதத்தில் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிராக இல்லை. அதே நேரத்தில் 50 ஆண்டுகளாக சமூக – பொருளாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது” எனவும் முதல்வர் பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் ” 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என 2000 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் உறுதியளித்ததுபோல, 2026ஆம் ஆண்டிற்கு பிறகும் 30 ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவத்தில் மாற்றம் ஏற்படாது என பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும்” எனவும் கூறி தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025