திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் சின்னம் சிக்கல்…

Thirumavalavan - Vaiko

DMK Alliance : மதிமுக, விசிக கட்சிகளுக்கு இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காமல் இருந்து வருகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனால் பிரதான அரசியல் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகள் தங்களுக்கான தேர்தல் சின்னங்களை கேட்டு தேர்தல் ஆணையத்தை முறையிட்டு வருகின்றனர்.

மதிமுக – பம்பரம் :

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வைகோ மகன், துரை வைகோ போட்டியிடுகிறார். மதிமுகவின் பொது சின்னமாக பம்பரம் சின்னம் அறியப்படுகிறது. இதனால் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என மதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் பதில் கூறிய தேர்தல் ஆணையம், ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை ஒதுக்க முடியாது என கூறியது. இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என மதிமுக தலைமை ஆலோசித்து வருகிறது.

விசிக – பானை :

அதே போல, திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்கள் கட்சி சின்னமாக அறியப்படும் பானை சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தை அணுகி இருந்தனர்.  தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போது வரையில் சின்னம் குறித்து எந்த நிலைப்பாடும் எட்டப்படாத நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது.

தமிழகம் உட்பட ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் விசிக கட்சி சார்பில் குறிப்பிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். அதனால் தங்களுக்கு பானை சின்னத்தை பொது சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவசர வழக்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக தாக்கல் செய்துள்ளது.

திருமா அதிருப்தி :

இதற்கிடையில், விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. பாஜக ஆதரவு கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தாமதம் ஆகிறது என தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

பாஜக கூட்டணி கட்சிகள் :

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் 2 தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் 3 தொகுதியில் போட்டியிடும்  தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்