ராமதாஸ் விவகாரம் : “மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை” சேகர்பாபு திட்டவட்டம்!
ராமதாஸ் குறித்து முதலமைச்சர் பேசியதில் எள்ளளவும் தவறில்லை. அப்படி இருக்கையில் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்ததாகவும், இது ரகசிய சந்திப்பா அல்லது அதிகாரபூர்வ சந்திப்பா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஏதேனும் அறிக்கை வெளியிட்டு கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கட்டமாக பதில் அளித்துவிட்டு சென்றார்.
ராமதாஸ் மீதான முதலமைச்சரின் இந்த விமர்சனம் பாமக மற்றும் பஜவினரிடைய எதிர்ப்பை கிளப்பியது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ஒரு மூத்த அரசியல் தலைவரை முதலமைச்சர் கொச்சைப்படுத்திவிட்டார். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகியோரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இப்படியான சூழலில் இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ” எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? முதலமைச்சர் அப்படி என்ன சொன்னார்? தினமும் தேவையில்லாமல் அறிக்கை வெளியிட்டு வருகிறார் என்று தானே கூறியுள்ளார். முதலமைச்சர் பேசியது தமிழில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் தானே? நாடாளுமன்றத்தால் தடை செய்யப்பட்ட வார்த்தைகளையா முதலமைச்சர் பேசிவிட்டார்?
கடந்த காலங்களில் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகளை சென்று பாருங்கள். கொச்சை வார்த்தைகளை கூறியிருப்பார். எங்கள் முதலமைச்சர் எப்போதும் கண்ணியத்துடன் நடந்து வருபவர். இதற்கு மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை . அவர் கூறியதில் எள்ளளவும் தவறில்லை. ஒருவேளை தவறாக பேசியிருந்தால் அதற்கான பிரசித்தியத்தை அவர் செய்வார். ” என்று தெரிவித்தார்.