“அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை., அவர்கள் நீக்கப்பட்டவர்கள்.,” இபிஎஸ் திட்டவட்டம்.!
அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, அவர்கள் நீக்கப்பட்டவர்கள் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (அக்டோபர் 17) அதிமுக கட்சியின் 53வது ஆண்டுவிழாவானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்கும் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த இபிஎஸ், “நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் கூறுகிறீர்கள். 6 பேர் என்னை சந்தித்தார்கள். அவர்களை கட்சியில் சேர்க்க சொல்லி கூறினார்கள் என்று., இங்கு தான் அனைவரும் இருக்கிறார்கள். அவர்கள் கூறியது அத்தனையும் பச்சை பொய். இணைக்க சொல்லி யாரும் என்னிடம் கூறவில்லை. சிலர் அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க இவ்வாறு பொய்யான தகவல்களை வேண்டுமென்றே பரப்புகிறார்கள்.
நாங்கள் தான் அதிமுக. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீங்கள் தான் கூறுகிறீர்கள் அதிமுக 2ஆக பிரிந்தது என்று. அப்படியெல்லாம் கூறாதீர்கள். அதிமுகவில் ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியில் இருந்து அவர்கள் விலகவில்லை. நீக்கப்பட்டவர்கள். ” என ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் இணைப்பு குறித்த பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி மிகவும் கட்டமாக தனது பதிலை கூறினார்.