மருந்து தட்டுப்பாடு இல்லை.. காய்ச்சல், உடல் வலி இருந்தால்.. உடனே இதை செய்யுங்கள்- அமைச்சர்
காய்ச்சல், உடல் வலி, தலை வலி இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இந்த காய்ச்சலால் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவும் செய்தி தவறானது. கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு என்று தொடர் செய்திகள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை, தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. நிர்வாக ரீதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் ஒரு சிலர் அரசின் மீதான கோபத்தில் தட்டுப்பாடு என வதந்தி பரப்புகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதன்பின் பேசிய அமைச்சர், காய்ச்சல், உடல் வலி, தலை வலி இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி, அந்த குழந்தைகளை தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிந்து தொடர்ந்து பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒருவருக்கொருவர் 2 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.