ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்குவது நோக்கம் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன்!
கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா வெளியேற வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல என கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகலுக்குப் பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி கொடுத்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். கட்சியில் இருந்துகொண்டே கூட்டணி கட்சி பற்றி அவர் பேசிய காரணத்தால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகியது குறித்தும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் “ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அவர் வெளியிட்ட அறிக்கை கட்சிக்கு எதிரானது இருந்தது. கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து அவர் பேசியது அவருக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது. ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு கிடையாது.
கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு. அவர் மீண்டும் வி.சி.க.,வில் இயங்க வேண்டுமென்று நினைத்து இருந்தால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்திருப்பார். விசிகவில் அவர் நல்ல நோக்கத்தோடு தான் கட்சியில் வந்து இணைந்தார். இப்போது கட்சியில் இருந்து விலகுகிறேன் என கூறியிருக்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் அவருக்கு நியமானதாக இருக்கலாம்..ஆனால் அது கட்சி வாயிலாக ஒலிக்கவேண்டும்.
என் 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை 2 பேர் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன், அதுவும் இடைநீக்கம் மட்டுமே. ஆதவ் அர்ஜுனா விளக்கம் கேட்பார் அதற்கு விளக்கம் கொடுத்து விசாரிக்கலாம் என்றுதான் இருந்தேன். அதற்கான வாய்ப்பை தற்போது அவர் இழந்துவிட்டார். கட்சியில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார்.
ஒரு கட்சிக்கு வந்துவிட்டார்கள் என்றால் எவ்வளவு பெரிய ஆற்றலை படைத்தவர்களாக இருந்தாலும் அந்த கட்சிக்கு கட்டுப்படுவது முக்கியமானது. அந்த கட்சியின் நடைமுறைக்கு ஏற்ப செயல்படுவது மிகவும் முக்கியம். அவருக்கு சரி என்கிற முறையில் தான் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவிற்கு அரசியலில் அதிகமாக ஆர்வம் அதிகமாக இருக்கிறது, உடனே எதையும் சாதித்துவிட வேண்டும் என்று துடிக்கிறார். அவர் என்ன நினைத்தாலும் அது கட்சிக்குள் சொல்லி கட்சியின் குரலாக ஒலிக்க வேண்டும்.
சரி என்ற அடிப்படையில்தான் அவர் அந்த முடிவை எடுத்திருக்கிறார், மற்றபடி, கட்சியிலிருந்து அவரை நீக்க வேண்டும் அல்லது அவர் கட்சியில் இருந்து அவர் விலகவேண்டுமோ என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை” எனவும் ஆதவ் அர்ஜுனா விலகல் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.