“யாரோ சொல்லி விஜய் பேசுகிறார்., திமுக கூட்டணியை உடைக்க முடியாது.!” கே.பாலகிருஷ்ணன் பேட்டி.!
விஜய் பேசியதால் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, யாரோ சொல்லிக்கொடுத்ததை அவர் கூறியது போல தெரிகிறது என சி.பி.எம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் இன்னும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. அவர் கூறிய ஆட்சி, அதிகாரத்தில் பங்கு , கூட்டணி ஆட்சி என்ற கூற்றுக்களுக்கு தற்போதும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக கட்சித் தலைவர் விஜய் பேசியது குறித்து தனது விளக்கத்தை அளித்தார். அதில், ” விஜய் போல நிறைய பேர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். இதைவிட, பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது இதைவிட பிரம்மாண்டமான கூட்டம் இருந்தது. கட்சி ஆரம்பித்த உடனேயே அது பற்றி கருத்து கூற வேண்டியதில்லை. அவர் கூறிய கருத்துக்களால் திமுக கூட்டணியில் எந்த விதமான சலசலப்பும் இல்லை.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அவர் கூறிய விஷயங்களுக்கு, அதனால் எழுந்து பலவிதமான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களே (விசிக) தெளிவுபடுத்தி உள்ளனர். அதற்காக திமுக அரசுடன் எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு கருத்து வேறுபாடு இல்லை என கூற முடியாது. நாங்கள் எங்கள் கோரிக்கையை அரசிடம் கேட்கத்தான் செய்வோம்.
திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை விட்டுக் கொடுக்க முடியாது. நிலம் கையகப்படுத்துதலை விட்டுக் கொடுக்க முடியாது. அந்த விவகாரங்களில் எங்கள் போராட்டங்கள், கோரிக்கைகள் வழக்கம் போல தொடரும். மற்றபடி, பாஜக போன்ற மதவெறி கொண்ட அமைப்பை எதிர்த்து ஒரு அணியில் விற்பதற்கு நாங்கள் துணை நிற்போம்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியதற்கு, அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். எங்களிடம் இந்த கொள்கை இருக்கு அதனால் கூட்டணிக்கு வாருங்கள், நாங்கள் ஜெயித்தால் இதனை செய்வோம் எனக்கூறி கூட்டணிக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கலாம். அதனை விடுத்து கூட்டணிக்கு வந்தால் பதவி தருவோம் எனக் கூறுவது, பதவிக்காக நாங்கள் ஓடுவது போல, இழிவுபடுத்தும் செயலாக உள்ளது. இதனால் என்ன பாதிப்பு ஏற்பட போகிறது.? யாரோ சொல்லிக் கொடுத்து அவர் (விஜய்) பேசியுள்ளார் என்று தெரிகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.” என கே.பாலகிருஷ்ணன் பேசினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் உடன் இருந்தார்.