என்ன நடந்தது DD பொன்விழா ஆண்டு விழாவில்.? புயலை கிளப்பிய தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்.!

தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சேனல் பொன்விழா ஆண்டில் தமிழ்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

Tamilnadu Governor RN Ravi

சென்னை : நேற்று தூர்தர்சன் தமிழ் (பொதிகை) தொலைக்காட்சியின் பொன்விழா ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆரம்பம் முதலே எதிர்ப்பு எழுந்திருக்காது. ஆனால், இந்த நிகழ்ச்சியுடன் சேர்த்தே ஹிந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவும் நடைபெரும் என அறிவிக்கப்பட்டதால் நேற்றைய நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்னரே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எதிர்ப்பு என பல்வேறு எதிர்ப்புகளை இந்த நிகழ்ச்சி பெற்றுவிட்டது.

ஹிந்தி மாதம் என்பது ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் கொண்டாடட்டும். ஆனால் ஹிந்தி பேசாத, அதனை திணிக்க முயற்சிப்பதாக எதிர்ப்புகள் நிலவி வரும் மாநிலமான தமிழ்நாட்டில் விழா கொண்டாடப்படுவது ஒருவகையில் ஹிந்தி திணிப்பு எனக் கூறி எதிர்ப்புகள் எழுந்தது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சையாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்ற இந்த விழாவின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என தொடங்கும் இப்பாடலில்,  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை முழுவதுமாக நீக்கப்பட்டு பாடப்பட்டது.

திராவிடம் எனும் கூற்றுக்கு எதிராகவே கருத்துக்களை பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட இந்த விழாவில் திராவிடம் எனும் சொல் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரி நீக்கப்பட்டது பெரும் புயலை கிளப்பியது.  மேலும், இந்த விழாவில் பேசிய ஆளுநர் ரவி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக முயற்சி நடக்கிறது என்றும் பேசி பரபரப்பை கிளப்பினார். மேலும் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக பேசிய ஆளுநர், தமிழ்நாட்டில் 3வது மொழியை அனுமதிக்க மறுக்கிறார்கள் என பேசினார்.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நேற்று நடைபெற்ற விழா முடிவதற்குள்ளாகவே, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கருத்துக்கள் எதிரொலித்தன.  “ஆளுநரா? ஆரியநரா?  திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்.  சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். ‘ என முதலமைச்சர் கருத்து தெரிவிக்க,

“ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது, “தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி. தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு எதிர்ப்புகள் வந்ததை அடுத்து, ” தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது ஆளுநருக்கு மரியாதை உண்டு. ‘திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டது பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தினோம். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர, ஆளுநருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை ” என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

இதனை அடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, ”  முதலமைச்சர் என்மீது இனவாத கருத்துகளை முன்வைத்துவிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன். ” என விளக்கம் கொடுத்திருந்தார்.

இருந்தாலும் இந்த சர்ச்சைகள் நிற்கவில்லை. முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா? 2013-2014  தற்போது வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ.167 கோடி மட்டுமே என பல்வேறு கேள்விகளை குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல., துணை முதலமைச்சர் உதயநிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவினர் கூட தமிழ்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது தவறு என கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் ஆளுநரை குற்றசம்சாட்டவில்லை.

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய விவகாரம் அரசியல் கட்சி சார்ந்து அல்லாமல் பொதுவாகவே எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. அதனால் தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தூர்தர்சனுக்கு ஆளுநர் அலுவலகமே கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk