#Justnow:”ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை” – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் அறிவிப்பு!
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,தமிழகத்தில் மேலும் கொரோனா அதிகரித்தால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஒரு மாற்று திட்டத்தை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்துள்ளதாகவும்,இது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.குறிப்பாக,கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக பொதுக்குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் இத்தகைய மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும், குறிப்பாக, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,அவர் கூறுகையில்:எடப்பாடி பழனிசாமி சர்வதிகார மனநிலையோடு செயல்பட்டு வருகிறார்.தலைமைக்கழகம் என்ற பெயரில் அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல.இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில்,அடுத்த நிலையில் இருக்கும் பொருளாளருக்கு தான் சின்னமும்,கட்சியை வழி நடத்தும் அதிகாரமும் உள்ளது.ஏனெனில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு,பிறகு பொருளாளர் பொறுப்பில்தான் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கியது!
அந்த வகையில்,பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது.குறிப்பாக,அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை”,என்று தெரிவித்துள்ளார்.