வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு.. சாதி பிரச்சனை இல்லை.! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.! 

Anbumani Ramadoss

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு, பின்னர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தற்போதுள்ள திமுக ஆட்சி காலத்தில் சட்டம் உறுதி செய்யப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றம் இந்த சட்டமசோதாவை நிறைவேற்ற உத்தரவிட்டது.

தற்போது வரை வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. அதனால் இன்று தமிழக சட்டப்பேரவை துவங்கி உள்ள சமயத்தில், இன்று காலை  தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் சந்தித்து இந்த விவகாரம் குறித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்.

முதல்வரை சந்தித்த பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்டு,  திமுக ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த சட்டம் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யபட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்று உள்ஒதுக்கீடு முறையான கணக்கீட்டின் படி அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளியானது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஒன்றரை வருடம் ஆகிறது இன்னும் அந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு இந்த சட்டத்தை அமல்படுத்த பிற்படுத்தப்பட்ட ஆணையம்  ஒன்றை அமைத்தது. மேலும் எம்பிசி உள்ஒதுக்கீடு வழிமுறைகளையும் கொடுத்தது. ஆனால் தற்போது வரை எந்த பரிந்துரையையும் அந்த ஆணையம் தமிழக அரசிடம் கொடுக்கவில்லை.

ஆணையம் அமைத்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் ஒன்றும் செய்யவில்லை. வன்னியர்கள் தரவுகள் சேகரிக்க 15 நாட்கள் தான் ஆகும், ஆனால் 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தரவுகள் சேகரிக்கப்படவில்லை. டாக்டர் ராமதாஸ் ஐயா நிறைய முறை முதல்வர்களை சந்தித்து கோரிக்கை வைத்து விட்டார். நாங்களும் அரசிடம் பலமுறை முறையிட்டுவிட்டோம்.

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரிலாவது முதல்வர், இந்த சட்டத்தை  அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். முதல்வர் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார். தகவல் சேகரித்து கொண்டு இருப்பதாக கூறினார். இந்த MBC பிரிவினருக்கு இடஒதுக்கீட்டுக்கு 1980 – 1987 காலகட்டம் முதல் பல கட்ட போராட்டம் நடத்தினோம்.  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் பிறகு 20 விழுக்காடு எம்பிசி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

MBC இடஒதுக்கீட்டில் போராடியது பெரும்பாலானோர் வன்னியர்கள். அதனால் தான் உள்ஓதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். இது சாதி பிரச்னை இல்லை. சமுக நீதிபிரச்சனை. தமிழ்நாட்டில் மிக பெரிய சமுதாயம் வன்னியர் சமுதாயம். இந்த சமுதாயம் வளர்ந்தால் தமிழ்நாடே வளர்ச்சி பெரும். வன்னியர் சமூகத்தினர் 20 மாவட்டங்களில் இருக்கிறார்கள்.  ஆனால் அந்த மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களாக அதிக வேலைவாய்ப்பு இல்லை. கல்வி அறிவில் பின்தங்கியுள்ளது. அதிக குடிசைகள் உள்ள மாவட்டங்களாக உள்ளது. அதிக மதுவிற்பனை இருக்கும் மாவட்டம் வடமாவட்டங்களாக உள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை.

இதனை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரலாம். தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால் இந்நேரம் கொண்டு வந்து இருப்பார்கள். இந்த எண்ணம் முதல்வருக்கு இருக்கிறதா இல்லையா என பார்க்கலாம்.  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 1980 முதல் வலியுறுத்தி வருகிறோம்.  100 முறை போராட்டம் நடத்தியுள்ளோம். 1000 முறை கடிதம் கொடுத்துள்ளோம்.  தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுக்கப்பட வேண்டும்.

13 கோடி மக்கள் தொகை இருக்கும் பீகாரில் 45 நாட்களில்  500 கோடி செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தபட்டது. தமிழகத்தில் 7 கோடி மக்கள் தொகை தான் இருக்கிறது பீகாரை விட குறைவான நாட்கள் தான் குறைவான செலவு தான் ஆகும். கர்நாடகா, ஒரிசாவில் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு விட்டது. விரைவில் வெளியிட உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்  என கூறிஉள்ளனர். சமூகநீதி பேசும் திமுக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்