ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை – முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த திட்டம்..!
ஜல்லிக்கட்டு அமைப்பு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் ஜூன் 5-ம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டம்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின், ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவசர சட்டமும் இயற்றப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வகுத்த அவசர சட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.
இதன் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுடன் இயற்றப்பட்டதை எடுத்துக்கூறியதோடு, காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை என பல்வேறு வாதங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டது.
இதன்பின், ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 18-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு வாதம் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. என கூறி , தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு அமைப்பு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் ஜூன் 5-ம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டிற்கு தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழக அரசின் சார்பில் சிறப்பாக வாதாடி திருப்பி பெற்று தந்ததாக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.