அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் கருகிய தாமரையை அண்ணாமலை அல்ல, ஆண்டவனே நினைத்தாலும் மலர வைக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், குழு உறுப்பினா் எம்.ஏ.பேபி, கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த மாநாட்டில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி விமர்சித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தை அவருடைய களமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலை பார்த்து நான் கேட்கிறேன்..அண்ணா பல்கலைகழக மாணவிக்காக அப்படி கொதிக்கும் நீங்கள் பொள்ளாச்சியில் கொடுமை சம்பவம் நடந்தபோது அமெரிக்காவுக்கு படிக்க போயிருந்தீர்களா?
லண்டனுக்கு சென்றமாதிரி அப்போது வெளிநாட்டிற்கு சென்றிருந்தீர்களா? ஏன் அப்போது அந்த சம்பவத்திற்கு நீங்கள் கொதிக்கவில்லை? இந்த சம்பவத்தில் தமிழாண்டு கொதித்துக்கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி பேசிக்கொண்டிருந்தீர்கள். இதன் காரணமாக தான் நீங்கள் பொள்ளாச்சி சம்பவத்தில் எதுவும் பேசவில்லை. எனவே, உங்களை பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை கவலையில்லை.உங்களுக்கு அரசியல் தான் முக்கியமாக தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜக முயலும் அந்த முயற்சிகளை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். உங்களுடைய முயற்சி தமிழகத்தில் வெற்றிபெறாது. ஒரு காலத்தில் தமிழிசை சௌந்தர்யராஜன் தமிழ்நாட்டில் தாமரை மலரப்போகிறது என சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால், அவர் தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலரவில்லை. அது கருகி போன காட்சியை தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கருகிய அந்த தாமரையை அண்ணாமலை அல்ல நீங்கள் வழிபடுகின்ற ஆண்டவனே நினைத்தால் கூட இங்கே மலர வைக்க முடியாது” எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.