பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!
பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் பெறப்படுகிறது என தமிழ்நாடு அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை ஆய்வுக்கூட முடிவுகளும் உறுதிப்படுத்தி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யானது திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்தும் பெறப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் தரம் குறைவான நெய் அனுப்பியதாகவும், அதனால் அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தானம் கூறியது.
இந்நிலையில், ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது என்றும், அதனால் பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டுப்போயுள்ளது என்றும் சமூக வளைதளத்தில் சிலர் ஆளும் திமுக அரசை குற்றம் சாட்டி இருந்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் TN Fact Check அமைப்பு தங்கள் சமூக வலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. அதில், பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பகிரப்படும் செய்திகள் வதந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிருதத்தில் பயன்படுத்தப்படும் நெய் தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் பெறப்படுகிறது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம்: விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக வதந்தி! https://t.co/xOgNK909nY pic.twitter.com/ZpFG5Tsb8C
— TN Fact Check (@tn_factcheck) September 20, 2024