NEET : நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.! அமைச்சர் மா.சுப்ரமணியன் நம்பிக்கை.!
மருத்தவ இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனும் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த தேர்வானது இந்தியா முழுக்க நடைபெறும் பொது நுழைவு தேர்வாகும். இந்த நீட் தேர்வில், தோல்வி அடைந்து பல்வேறு மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்ட காரணத்தால், இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து சட்டரீதியாக போராடி வருகிறது.
இந்நிலையில் அண்மையில் முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுகலை மருத்துவ படிப்பில் சேரலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது. இதனை ஏற்கனவே நீட் தேர்வை எதிர்த்து வரும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வசைபாடி வருகின்றன. நீட் தீர்வில் பூஜ்யம் என்றால் எதற்காக அந்த தேர்வு நடத்த வேண்டும் என்ற கேள்விகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
நேற்று சென்னையில் மருத்துவ கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளுக்கான ஜோதியை ஏற்றிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், நீட் தேர்வில் பூஜ்ஜியம் எடுத்தாலும் மருத்துவம் பயிலலாம் என்ற அறிவிப்பு அந்த தேர்வால் எந்த பயனும் இல்லை என்பதை தெளிவாக்குகிறது.
இந்த தேர்வு மூலம் பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்கிற நிலை தான் உள்ளது. இதன் மூலம் தனியார் மருத்துவமனை கல்லூரிகள் அதிக லாபம் ஈட்டும். தற்போது நீட் தேர்வில் விலக்கு கேட்டு வரும் தமிழக அரசுக்கு தற்போது சட்ட ரீதியில் நீட் ரத்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ‘பூஜ்ஜிய மதிப்பெண்’ அறிவிப்பு முக்கிய வாதமாக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மா .சுப்பிரமணியன் தெரிவித்தார் .