புயல் வரப்போகுது மக்களே! இன்று இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உட்பட மொத்தமாக 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-11-2024) அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
எப்போது கரையை கடக்கும்?
அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 28-ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் பொழுது புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது
இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இந்நிலையில், இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான பெய்யக்கூடும். வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.