திருவள்ளூரில் தனித்தீவாக மாறிய 2 கிராமங்கள்.! ஆற்று வெள்ளத்தால் வீடு திரும்ப முடியாமல் மக்கள் தவிப்பு.!
கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன.
மாண்ட்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. இதனால், பல்வேறு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளில் உபரிநீரை திறக்கபட்டு வருகின்றன.
பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரை அடுத்து உள்ள சுப்பாரெட்டி பாளையம், பள்ளிபுரம் கிராமத்து மக்கள் மீஞ்சூருக்கு வருவதற்கு கொற்றலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கொற்றலை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தரைப்பாலம் மூழ்கியது. இதனால், கிராமத்தில் இருந்து வெளியே சென்றவர்கள் உள்ளே வரமுடியாமலும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.