தமிழ்நாட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் உள்ளன – ஆளுநர் ஆர்.என்.ரவி
பெண் குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம் என்று அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் உரை.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழா மதுரை காமராஜர் பல்கலைக் கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு முனைவர் பட்டம் மற்றும் பிற பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.
இதன்பின் பேசிய ஆளுநர், நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் உள்ளன. சமூக நீதியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களால் ஆண்களை விட அதிகமாக பெண்கள் கல்வி கற்று வருகின்றனர். பெண் குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம்.
உலகின் அனைத்து துறைகளிலும் தமிழ் பெண்கள் சாதித்து வெற்றி பெற வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவுடன் உரையாடிய ஆளுநர் மாணவர்களை தொழில் முனைவோர்களாகவும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் திறன் மேம்பாட்டுக் கல்வி திட்டங்களை ஊக்குவிக்க வலியுறுத்தினார்.