அப்படிபோடு…மேலும் ஒரு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து,தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி,தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில்,தேனி மாவட்டம்,பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றியுள்ளது.மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில்,அமமுக வேட்பாளர் மிதுன்சக்கரவர்த்திக்கு 8 வார்டு உறுப்பினர்கள் வாக்களித்ததை தொடர்ந்து,பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை அமமுக கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே,தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை தன்வசம் வைத்துள்ள அமமுக தற்போது தேனி மாவட்டம்,பழனிசெட்டிபட்டி பேரூராட்சியையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.