மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 10 பேர் தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயின் போது, சிதறி ஓடியதால் பள்ளத்தில் விழுந்தவர்கள் நெருப்பில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த மலையேற்ற ஆர்வலர்கள் கிளப் ஒன்று, மலையேற்றப் பயிற்சிக்காக 39 பேர் கொண்ட குழுவை தேனி மாவட்டம் குரங்கணி பகுதிக்கு அழைத்துச் சென்றது. அவர்களில், 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 12 பேர் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 39 பேரில் 3 பேர் தயங்கி பின்வாங்கிய நிலையில் 36 பேர் மட்டும், வெள்ளிக்கிழமை இரவு கொழுக்கு மலைப் பகுதியில் மலையேற்றத்தை, 2 குழுக்களாக தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக எல்லையில் உள்ள குரங்கணியில் இருந்து மலையேற்ற குழுவினர் பயணத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் பிற்பகலுக்குப் பிறகு மலையேற்றக் குழுவினர் நடந்து சென்ற பாதையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 27 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயை பார்த்து பீதி அடைந்து நாலா புறமும் சிதறி ஓடியுள்ளனர். வனப்பகுதிக்கு புதிது என்பதால், வழி தெரியாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுள்ளர். 9 பேர் கொண்ட குழுவினர், வழிகாட்டிகள் உதவியுடன் சரியான பாதையில் கீழே இறங்கத் தொடங்கினர். அவர்கள் காட்டுத் தீ குறித்தும், அதில் சிக்கியுள்ளவர்கள் குறித்தும் தகவல் கொடுத்ததை தொடர்ந்து, பழங்குடியினரும், அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் துணிச்சலாக முதலில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதன் பிறகு தகவல் தெரியவந்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உத்தரவின்பேரில் விமானப் படை ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டன.
மலையடிவாரத்தில் ஆம்புலன்ஸ் போன்றவை தயாராக வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் காட்டுத் தீயின் போது சிதறி ஓடிய போது, பள்ளம் ஒன்றில் 9 பேர் விழுந்துள்ளனர். அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் நெருப்பில் சிக்கி உடல் கருகி 9 பேரும் உயிரிழந்தனர். 27 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். இவர்களில் படுகாயம் அடைந்த நிஷா என்பவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை பத்தானது. உயிரிழந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த விவேக், திவ்யா ஆகியோர் திருமணமாகி மூன்றரை மாதங்களே ஆன புதுமணத் தம்பதியாவர். திருமணமாகி 100வது நாளை கொண்டாடுவதற்காக டிரெக்கிங் சென்ற போது இருவரும் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தது, கவுந்தம்பாடி பகுதி பொதுமக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே போன்று காட்டுத்தீயில் சிக்கிய உயிரிழந்த காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரைச் புனிதாவுக்குத் திருமணமாகி ஒன்றரை மாதமே ஆகியுள்ளது. அவர் கணவர் கடைசி நேரத்தில் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்லாததும் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்டவர்களில் பத்து பேருக்கு எந்த காயமும் இல்லை என்றும் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தீக்காயம் அடைந்தவர்களில் 9 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிணத்துக்கடவை சேர்ந்த திவ்யா திருப்பூர் மாவட்டம் தேக்கம்பாளையத்தைச் சேர்ந்த சக்தி கலா, சென்னையைச் சேர்ந்த அனுவித்யா, ஜெயஸ்ரீ ஆகியோர் 90 முதல் 100 சதவீத தீக்காயங்களுடனும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இதனிடையே, அவர்களை டிரக்கிங் அனுப்பிவைத்த வெளிநாட்டு நபரான பீட்டர், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.அவரது அலுவலகத்திலும் போலீசார் ஆய்வு நடத்தினர்.
இதற்கிடையே, தேனி குரங்கணி தீ விபத்தில் பலியான 10 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.