இன்று முதல் திரையரங்குகள் திறப்பு.!
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது . அதனையடுத்து சமீபத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர் .
இந்த விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பரமணியம் தமிழகத்தில் திரையரங்குகள் வரும் 10-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், தியேட்டரில் தங்களிடம் உள்ள பழைய வெற்றி திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளது. 50% இருக்கைகளுடன் செயல்பட உள்ள தியேட்டர்களில் அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும்,ஒரு இருக்கையிலிருந்து மற்றொரு இருக்கைக்கு இடைவெளி இருக்க வேண்டும் என்றும் , திரையரங்குகளில் நொறுக்கு தீனி வழங்க தடை , ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் கிருமிநாசினி தெளித்து தியேட்டரை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் திரையரங்குகள் இயங்கவுள்ளது. மேலும் புதுப்பட ரீலீஸ் இல்லாத காரணமாக முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் படங்களான சிவாஜி, மெர்சல், விஸ்வாசம், பாபநாசம், அசுரன், கடந்தாண்டு வெளியாகி வசூலில் அள்ளி குவித்து மெகா ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் ஓ மை கடவுளே ஆகிய படங்களை திரையிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இருதரப்பினர் இடையில் விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த விரைவில் முடிந்து புது படங்கள் ரீலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.