தியேட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டும்..! திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை..!
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதில் தமிழக அரசு திரையரங்குகளுக்கு கட்டண விகிதம் நிர்ணயித்து 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும், நடைமுறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிர்சாதன வசதியுடைய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 ஆகவும், குளிர்சாதன வசதியற்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.150 ஆகவும், மாநகராட்சி/பஞ்சாயத்து பகுதிகளில் குளிர்சாதன திரையரங்குகளுக்கு ரூ.200 ஆகவும், குளிர்சாதன வசதியற்ற திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் நிர்ணயம் செய்யவேண்டும்.
ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.450 ஆகவும், எபிக் திரையரங்குகளுக்கு ரூ.400 ஆகவும், சாய்வு இருக்கை வசதி கொண்ட திரையரங்குகளுக்கு ரூ.350 ஆகவும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.