“இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான்”…பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி!

பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தன்தான் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

pmk mugunthan anbumani ramadoss

விழுப்புரம் : கடந்த சில நாட்களுக்கு முன்பு  பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் , கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பிற்கு தனது மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் பரசுராமனை நியமித்து அறிவித்தார். பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுத்ததை மேடையிலேயே கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

முகுந்தன் கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பா? கட்சியில் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என மேடையிலேயே எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் கோபமான ராமதாஸ், நான் தான் கட்சியை உருவாக்கினேன். என் முடிவுக்கு கட்டுப்படாதவர்கள் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம் என அறிவித்தார். இதனால், அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இருவரையும் நேரில் அழைத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் “பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தன்தான் என அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ராமதாஸ் ” எனக்கும் அன்புமணிக்கு இடையே நடந்தது கருத்து வேறுபாடு இல்லை. பொதுவாகவே, கட்சிகளின் பொதுக்குழுவில் ஊடக நண்பர்களை அனுமதித்தது இல்லை. பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது உட்கட்சி விவகாரம். அது பேசி இப்போது சரியாகிவிட்டது. அன்புமணி இங்கே வந்தார் அவருடம் பேசினோம். மற்றபடி ஒண்ணுமில்லை” என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் இளைஞரணித் தலைவர் முகுந்தன் தானா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராமதாஸ் ” நான் ஏற்கனவே பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்த படி பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தன் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை.  அவரை இளைஞரணித் தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது தொடர்பான நியமனம் கடிதமும் அவரிடம் கொடுத்துவிட்டேன்” எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதன்பிறகு இது கட்சி வளர்ச்சியை பாதிக்குமா என மற்றோரு செய்தியாளர் கேள்வி கேட்ட நிலையில், அதற்கு பதில் சொன்ன ராமதாஸ் ” இது கட்சி வளர்ச்சியை நிச்சயமாக பாதிக்காது” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ” நான் எப்போதும் சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், என்னை விமர்சனம் செய்யுங்கள் என்று தான். கோபமாக நான் சொல்லவில்லை என்மீது தவறு இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக விமர்சனம் செய்யலாம்.

தவறு செய்யாத மனிதன் இருக்கலாம், தவறு செய்யாத கட்சிகள் இருக்கலாம். எனவே,  தவறு என்பது சொன்னால் மட்டும் தான் தெரியும். என் மீது தவறு இருந்தால் சொல்லுங்கள். அப்படி நீங்கள் சொன்னால் தான் நான் என்னுடைய தவறை திருத்திக்கொள்ளமுடியும். ஒரு கட்சியின் தலைவராக இருக்க கூடியவர் அல்லது கட்சியின் நிறுவனர் யாராக இருந்தாலும் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கோபப்படும் வகையில் கேள்வி கேட்டால் அதற்கு அவர்கள் கோபப்படவே கூடாது. எந்த கேள்வியாக இருந்தாலும் சாந்தமாக பதில் சொல்லவேண்டும்” எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்