போராட்ட களத்தில் சாம்சங் ஊழியர்கள்., தற்போதைய நிலவரம் என்ன.?
சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிற்சாலை ஊழியர்கள் இன்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி, ஊக்கதொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை :
ஊழியர்களின் கோரிக்கைகள், போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பெயரில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் சாம்சங் நிறுவன அதிகாரிகள் மற்றும் போராட்டம் நடத்தும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், ரூ.5 ஆயிரம் வரை சிறப்பு ஊக்கத்தொகை, குடும்ப விழா விடுமுறை அதிகரிப்பு, குடும்ப விழாவுக்கு ரூ.2 ஆயிரத்திற்கு பரிசு, ஊழியர்கள் இறந்துவிட்டால் அவசர செலவுக்கு ரூ.1 லட்சம் அளிப்பது உள்ளிட்ட சலுகைகளை சாம்சங் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்று ஒரு தரப்பினர் போராட்டத்தை கைவிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை. போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா :
இந்நிலையில் நேற்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், ” சாம்சங் ஊழியர்களின் கோரிக்கை சார்ந்து 7 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. முதலமைச்சரின் உத்தரவுப்படி 3 அமைச்சர்களும் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையிலும் எதற்காக போராட்டத்தை ஊழியர்கள் தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு நாளும் ஊழியர்கள் ஊதியம் மறுக்கப்படும் என சாம்சங் நிர்வாகம் கூறுகிறது” என அமைச்சர் கூறியிருந்தார்.
ஊழியர்கள் விபத்து :
இந்த சமயம் தான், சாம்சங் நிறுவனத்தில் இருந்து 2 கிமீ தூரத்தில் சுங்குவார்சத்திரம் பகுதியில் இருக்கும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேற்று ஊழியர்கள் 20 பேர் வந்து கொண்டிருக்கும் போது, ஒரு சரக்கு வாகனம் லிப்ட் கொடுக்க தெரிகிறது. ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனம் சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஊழியர்கள் காயமடைந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில் காவல்துறையினரை ஊழியர்கள் கிழே தள்ளியதாக கூறபடுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காயமடைந்த ஊழியர்களை போரூர் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போராட்ட பந்தல் அகற்றம் :
இந்த சம்பவத்தை அடுத்து நேற்று நள்ளிரவு காவல்துறையினர், சி.ஐ.டி.யு. சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான முத்துக்குமார், பொதுச்செயலாளர் எல்லன், துணைச்செயலாளர் பாலாஜி, சிவனேசன், ஆசிக், மோகன்ராஜ் , மாதேசு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை அவர்களின் வீட்டிற்கே சென்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சுங்குவார்சத்திரம் பகுதியில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் போடப்பட்டிருந்த பந்தலும் அகற்றப்பட்டது.
தொடரும் போராட்டம்…
இதனை தொடர்ந்து இன்று காலையில் இருந்தே அதே போரட்ட இடத்தில் மீண்டும் சாம்சங் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். சிஐடியு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தியும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.