ஈரோடு கிழக்கை போல இந்தியா முழுவதும் விடியும்… முதலமைச்சர் பேச்சு!
எந்த ஒரு தனி மனிதரும் சுதந்திரா சிந்தனையுடன் வாழ முடியாத நெருக்கடி என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
இன்று ஈரோடு நாளை நம் நாடு என இந்த வெற்றி பயணம் தொடரும், ஈரோடு கிழக்கை போல் இந்தியா முழுவதும் விடியும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ஈரோடு கிழக்கு தொகுதியில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியை உழைப்புக்கான வெகுமதியாக கருதுகிறேன்.
ஈரோட்டு பாதையில் தொடங்கியதுதான் நம் திராவிட பயணம், அந்த பாதையின் தான் அண்ணாவும், கலைஞரும் பயணித்தனர். அண்ணா, கலைஞர் லட்சிய தடத்தில் நம் பயணம் தொடருகிறது. ஈரோடு மக்கள் சரியான எடை போட்டு திமுக கூட்டணியே நாட்டுக்கு தேவை என்பதை முடிவு செய்து தீர்ப்பு தந்துள்ளனர்.
இந்தியாவை மதவாத பாசிச சக்திகள் சூழ்ந்துள்ளது. இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்க நினைப்பவர்களை கையில் நாடு சிக்கி உள்ளது. மாநில உரிமைகள் பறிபோகின்றன, தாய் மொழிகளை அழித்து, ஆதிக்க மொழியை திணிக்கும் பண்பாட்டு படையெடுப்பு நிகழ்கிறது. எந்த ஒரு தனி மனிதரும் சுதந்திரா சிந்தனையுடன் வாழ முடியாத நெருக்கடி சூழ்ந்துள்ளது.
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய மத்திய அரசு எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நிலைமைகளால் தான் இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை தெற்கு பக்கம் திரும்பியுள்ளது. சென்னையில் நடைபெற்ற என் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்திய தலைவர்கள் பங்கேற்றனர் என தெரிவித்தார்.