தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி! – சீமான்
எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பான விகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்றும் குடியரசு தலைவர் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம் எனவும் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து நாங்கள் முடிவெடுக்க போகிறோம் என்றும் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு கூறினால், பேரறிவாளனை உடனே விடுதலை செய்து உத்தரவிடுகிறோம் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு இனியும் முடிவெடுக்க தவறினால் அரசியலமைப்பு சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. நியாயமும், நீதியும் பக்கமிருந்தும் அரசியல் தலையீட்டாலும், அதிகார முறைகேட்டாலும் இவ்வளவு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட தம்பி பேரறிவாளன் விடுதலை இன்றைக்கு சாத்தியப்படவிருப்பது அளப்பெரும் மனமகிழ்வைத் தருகிறது.
அரசியலமைப்புச் சாசனத்தைத் துளியளவும் மதியாது, கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிப்பொருளாக்கி, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்து வந்த இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடியாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இக்கூற்றைப் பார்க்கிறேன். ஆகவே, இனியும் தாமதிக்காது, 161-வது சட்டப்பிரிவின்படி எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி!https://t.co/6ALybDW5oe pic.twitter.com/uE4UN0ZKH4
— சீமான் (@SeemanOfficial) May 4, 2022