இந்த 3 தென் மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம்!
வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 3 தென் மாவட்டங்களில் கனமழைக்கு வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் இன்று (டிச,31) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.