“தாலிக்குத் தங்கம் தொடர்ந்து வேண்டும்;தொலைநோக்கு கொண்ட நிதிநிலை அறிக்கை” – விசிக தலைவர் பாராட்டு!

Default Image

2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன.

TNBudget2022

இந்நிலையில்,தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் தொலை நோக்கு கொண்ட நிதிநிலை அறிக்கை இது.இதை அளித்த முதலமைச்சர்,நிதி அமைச்சர்,நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:

இது வெறும் வரவு செலவு கணக்காக அல்ல:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது ஒரு சமூகநீதி கொள்கை அறிக்கையே ஆகும். அதாவது, இது வெறும் வரவு செலவு கணக்காக இல்லாமல் அரசின் கொள்கை- கோட்பாட்டை தெளிவுபடுத்தும் செயல்திட்ட அறிக்கையாகவும் அமைந்துள்ளது.

அதாவது,அனைத்து துறைகளிலும் சமூகநீதியை நிலைநாட்டுகிற வகையிலும்,அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்துகிற வகையிலும், தமிழ்நாட்டை முற்போக்கான – முன்னேற்றமான திசைவழியில் இட்டுச்செல்லும் வகையிலும் தொலை நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த நிதிநிலை மற்றும் சமூகநீதி கொள்கை அறிக்கையை விடுதலைச் ய சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும் நிதிநிலை அறிக்கை:

இந்திய ஒன்றிய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான நேரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும் நிதிநிலை அறிக்கையை திமுக அரசு சமர்ப்பித்துள்ளது. விளிம்புநிலை மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் தொலைநோக்குப் பார்வையும், சமூகநீதி சிந்தனையும் அடிப்படையாக இருப்பதே இந்த சிறப்புக்குக் காரணம்.

TNBudget2022

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்:

ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தவிர புதிய பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்’ ரூ.7000 கோடி செலவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, ஆதிதிராவிட நலப்பள்ளிகள், சீர்மரபினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் எதிர் வரும் ஐந்தாண்டுகளில் பதினெட்டாயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கேயே மிகச் சிறந்த கல்வி:

அதுபோலவே உயர்கல்வி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிவுசார் நகரம் இங்கு உருவாக்கப்படும்; அதில் உலக அளவில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக் கழகங்கள் தமது கிளைகளைத் துவக்க வழி செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் நம்முடைய மாணவர்கள் மிகச் சிறந்த கல்வியை இங்கேயே பெறக்கூடிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும்கூட தமிழ்நாட்டுக்குக் கல்வி பயில்வதற்காக வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Thol.Thiruma
Thol.Thiruma

ஒரு புறம் ஹிஜாப் தடை;ஆனால் தமிழகத்தில் பெண் கல்வி ஊக்குவிப்பு: 

பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள்,பட்டம்,பட்டயம் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வி பயிலும்போது அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உறுதித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். இந்திய ஒன்றிய பாஜக அரசு பெண்கள் கல்வி பயிலவே கூடாது என்பதற்கு ஹிஜாப் தடை போன்ற பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், இடைநிற்றலைத் தடுக்கும் விதமாகவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் திட்டம்:

அத்துடன் அரசுப்பள்ளிகளைப் புத்துணர்வு பெற வைப்பதற்கும் இந்த திட்டம் உதவும். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் பெயரில் உள்ள இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால் நடைமுறையில் இருந்த திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. தாலிக்குத் தங்கம் தருவது ஏழைப் பெண்களுக்குப் பேருதவியாக உள்ளது. எனவே, அந்தத் திட்டத்தை முறைகேடு நடைபெறாத வண்ணம் சீரமைத்துத் தொடர்ந்து செயல்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

FM PTR

ரூ.50 கோடி செலவில் 20 மைக்ரோ கிளஸ்டர்கள்:

தொழில்துறை வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளனர். ரூ.50 கோடி செலவில் 20 மைக்ரோ கிளஸ்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளும் சிறு குறு தொழில் முனைவோர்களும் பயனடைவார்கள். பெருமளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை குறித்து கொள்கை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

நம்புகிறோம்:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக அரசு கொள்முதல் செய்வதில் 5 விழுக்காடு அவர்களிடமிருந்து வாங்கவேண்டும் என்ற எமது கோரிக்கையை ஏற்று அறிவிப்பு செய்திருப்பதற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்திய ஒன்றிய அரசு 4 % வாங்கப்போவதாக அறிவித்தது. ஆனால் 1% கூட வாங்குவதில்லை. அப்படியில்லாமல் இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முழுமையாக செயல்படுத்தும் என நம்புகிறோம்.

விவசாயக் கடன்,நகைக்கடன்,சுய உதவிக்குழுக்களின் கடன்:

விவசாயக் கடன், நகைக்கடன், சுய உதவிக்குழுக்களின் கடன் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஏழை எளிய மக்களுக்கு ஆறுதல் அளிக்கும். அதுபோல் தாட்கோ கடன்களைத் தள்ளுபடி செய்யவும் இந்த அரசு முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மொத்தத்தில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் தொலை நோக்கு கொண்ட நிதிநிலை அறிக்கை இது. இதை அளித்த முதலமைச்சர், நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்