கர்நாடக வனத்துறையால் துப்பாக்கிசூடு.? மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்.!
கர்நாடக வனத்துறையினர் தான் மீனவர் ராஜாவை சுட்டுக்கொன்றனர். அதனால், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி கிராம மக்கள் மீனவர் ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக வனப்பகுதிக்கு ஒட்டிய பாலாற்று பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே , கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, ரவி, இளையபெருமாள் ஆகிய மூன்று மீனவர்களும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த வனத்துறையினர் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், 2 மீனவர்கள் தப்பித்த நிலையில், ராஜா எனும் மீனவரை காணவில்லை .
பிரேத பரிசோதனை : 3 நாட்களுக்கு பிறகு இன்று ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ஆற்றங்கறை பகுதியில் உடல் உப்பிய நிலையில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கு : இன்று பிரேத பரிசோதனை செய்ய இயலாது என மருத்துவர்கள் தெரிவித்ததால், நாளை பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. இந்நிலையில், மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொண்டதாகவும், அதனால், கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறி கிராம மக்கள் ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.