“முருகேசன்-கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது”- சீமான் வரவேற்பு..!
மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் முருகேசன்-கண்ணகி ஆணவப்படுகொலை தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி, விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில், உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், மீதமுள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கடலூர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.குறிப்பாக ,இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும்,மேலும் இனியாவது தமிழ் மண்ணின் வரலாறு கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும் என்றும் நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு வழங்கும்போது தெரிவித்தார்.
இந்நிலையில்,இந்த தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்று,முருகேசன் – கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:
“கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் கண்ணகி இணையரை ஆணவப் படுகொலை செய்திட்ட வழக்கில் 13 பேரைக் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை வழங்கியிருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன்.
மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது!
‘கண்ணகி மதுரையை எரித்து நீதி கேட்டது போல, முருகேசன் – கண்ணகி வழக்கின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கும் நீதி ஆணவப் படுகொலையை எரிக்கட்டும்’ என அறச்சீற்றத்தோடு தீர்ப்புரை எழுதிய நீதியரசரது நீதி நெறி போற்றும் மாண்பைப் பெரிதும் போற்றுகிறேன். இதற்காக சமரசமின்றி சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட வழக்கறிஞர் ரத்தினம் தலைமையிலான குழுவினருக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!
தமிழர்களைப் பிளந்து பிரிக்கும் கோடாரிக்காம்பான சாதி எனும் வெறிப்பிடித்து, மனிதர்களைக் கொன்று புசிக்கும் ஆணவப் படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,என்று குறிப்பிட்டுள்ளார்.
முருகேசன் – கண்ணகி வழக்கின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன்.
மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது!
ஆணவப்படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்!https://t.co/G1Ip2Tq1gB pic.twitter.com/d44P0D1fv5
— சீமான் (@SeemanOfficial) September 24, 2021