உச்சநீதிமன்றத்தில் வெல்லப்போவது யார்.? இபிஎஸ் vs ஓபிஎஸ்.! இன்று தீர்ப்பு நாள்…
இபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
அதிமுக கட்சியானது தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என பிரிந்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தான் அதிக முக்கியத்துவமும், ஆதரவாளர்களும் இருக்கின்றனர் என்பது நிதர்சனமாக தெரிகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்த தென்னரசு தான் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இந்த போட்டியில் இருந்து விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுச்செயலாளர் இபிஎஸ் : இந்த விவகாரமானது கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பூதகரமாக வெடித்தது. அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தனர்.
பொதுக்குழு செல்லும் : இந்த பொதுகுழுவை எதிர்த்தும் , அங்கு அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்ககோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், அதிமுக பொதுகுழுக்கூட்டம் செல்லும் என தீர்ப்பு அளிக்கப்ட்டது.
மேல்முறையீடு : சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குக்கான இறுதி கட்ட வாதங்கள் அனைத்தும் கேட்கப்பட்டது. தீர்ப்பு அளிக்கும் தேதியை மட்டும் குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீர்ப்பு : இன்று வெளியாகும் தீர்ப்பில் அதிமுக கட்சியும், இரட்டை இலையும் யாருக்கு என்பது தெளிவாகிவிடும். அதனை எதிர்நோக்கி தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, இந்திய அரசியல் வட்டாரத்திலும் பலர் காத்திருக்கும் வண்ணம் இந்த வழக்கு கவனத்தை பெறுகிறது.