இனி வாக்குச்சாவடி முகவர்களுக்கு இவை கட்டாயம் – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!
வாக்குச்சாவடி முகவர்களுக்கு மத்திய,மாநில அரசின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு,வருகின்ற பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதன்காரணமாக,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டையுடன் மத்திய மாநில அரசுகளின் ஏதாவது ஒரு புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குச்சாவடி முகவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையில் புகைப்படம் இடம் பெறாது என்பதால் இத்தகைய புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது,முகவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.