#Breaking:கலைஞர் நினைவிடம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ்,தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,திட்டப்பணிகளை தயாரானதாலும்,நினைவிடப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் பொதுப்பணித்துறையினர் தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி தந்ததால்,சென்னை மெரினாவில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
“தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை. சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில். நவீன விளக்கப் படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும்”என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் முன்னதாக அறிவித்துள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திட ஏதுவாக,கடந்த 28.09.2021 அன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கீழ்க்கண்ட அறிவுரைகளின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், பொதுப்பணித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச் சூழல். காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசு முதன்மைச் செயலாளர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டத் துறை செயலாளர் ஆகியோரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டன.
• பெருநகர சென்னை மாநகராட்சி – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருமேனியை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கி, தீர்மானம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்தல்,
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் – மேற்கண்ட நினைவிடக் கட்டுமானத்திற்கான வளர்ச்சித் திட்டம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திலிருந்து நகர் ஊரமைப்பு இயக்க திட்ட சட்டம் 1971, பிரிவு 56-ன்படி அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் –
- நினைவிடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-II-க்கு உட்பட்டதா என உறுதிப்படுத்துதல். மேலும் விதிமுறைப்படி உள்ளது என அறிக்கை அளித்தல்,
- கடலோர ஒழுங்குமுறை ஒழுங்குமுறை மண்டலம்-II பகுதிகளில், கட்டப்படும் கட்டடங்கள் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்கள் அல்லது சாலையையொட்டி அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தின் தற்போதைய கட்டமைப்புகளுக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் – பேரறிஞர் அண்ணா நினைவிடத்தை விரிவுபடுத்தி மூன்நுழைவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக தேவையான ஒத்துழைப்பு நல்குதல்,
- அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி (ரூபாய் முப்பத்தொன்பது கோடி மட்டும்) மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைத்திடலாம் எனக் கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
- மேலும்,அறிவுறுத்தப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்று அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்குமாறு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் அவர்கள் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.