துரோகிகளை வீழ்த்தும் காலம் நெருங்கி விட்டது – டிடிவி

TTV DHINAKARAN

வரும் 21ஆம் தேதி காலை 9 மணியளவில், கோவையில் அமமுக சார்பில் கழக செயல்வீரராகள் கூட்டம் நடைபெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட புரட்சித் தலைவர் அவர்களின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. என சூளுரைத்து ஏழை, எளிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களுமாகிய தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது இதயம் நிறைந்த அன்பு வணக்கங்கள்.

தமிழ்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை ‘தீய சக்தி’ என்று சொன்ன புரட்சித் தலைவர் அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் தங்கள் காலம் வரை திமுகவை தலைதூக்கவிடாமல் தமிழக மக்களை பாதுகாத்து வந்தனர். இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு சில துரோகிகளாலும், சில சுயநலவாதிகளாலும் அம்மா அவர்களின் மக்கள் நல ஆட்சிக்கு முரணான வகையில் சிலர் செயல்பட்டதாலும் தீயசக்தியான திமுக அரியணை ஏறியது.

எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் கிடையாது. என் உயிரினும் மேலான என் அருமை கழகக் கண்மணிகளும், என் மீது அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழ் நாட்டு மக்களும்தான் எனக்கு சொந்தம் எனக்கூறிய இதயதெய்வம் அம்மா அவர்கள் வளர்த்த இயக்கம், இன்று கயவர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கிறது.

அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற கடமையை முன்னிறுத்தித்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. எதிரிகளோடு சேர்த்து துரோகிகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலச்சூழல்தான் நமக்கு இப்போது உருவாகியுள்ளது. ஒரு சிலரின் சதித் திட்டங்களால் தேர்தல்களில் பெரிய அளவிலான வெற்றிகளை நம்மால் பெறமுடியவில்லை என்றாலும், இன்னும் எத்தனை எத்தனை தேர்தல்கள் வந்தாலும் களத்தில் நின்று மக்களைச் சந்தித்து வெற்றி பெறும் திறனை இறைவன் நமக்கு வழங்கியிருக்கிறார்.

உடலெங்கும் குருதியைக் கொண்டு சேர்க்கும் நரம்புகளைப்போல, கழகத்தின் பெருமைகளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்க்கும் சக்திதான் நீங்கள். நம்மை அழித்துவிடுவோம், ஒழித்துவிடுவோம் என்கின்றனர். அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் நாம் என்ன மண் பொம்மைகளா? போர்க்குணம் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிள்ளைகள் அல்லவா?

எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், சோர்ந்துவிடாமல் இமயமாக உயர்ந்து நிற்கிறோம். எதிரிகளையும் துரோகிகளையும் களைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்களைப் புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். இது நமக்கான காலம். தமிழ்நாட்டின் எதிர்காலம் நாம்தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.

ஒரு சில சுயநலவாதிகள் சுயலாபத்திற்காக நம்மை விட்டுப் பிரிந்து சென்றாலும், உண்மையான கழகத் தொண்டர்கள் அனைவரும் எந்தவித பலனும் எதிர்பாராமல் உழைத்துக் கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். அதை என்றும் நான் நினைவில் கொள்வேன்.

விசுவாசமிக்க தூய தங்கங்களே… எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. களம் காண்பதில் களைப்பறியா தீரர்கள் நாம். நம்மால் முடியாதது எதுவுமில்லை. இனிவரும் காலங்களில் நீங்கள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்பீர்கள். அதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் நாம் யார் என்பதை உலகறியச் செய்வோம்.

அம்மா அவர்களின் கோட்டையாக விளங்கிய கோவை தற்போது எதிரிகள் மற்றும் துரோகிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்காலிகமாக குடி கொண்டிருக்கும் அவர்களை அகற்றிவிட்டு, கோவை என்பது அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களின் கோட்டை என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவே வரும் 21ஆம் தேதி காலை 9 மணியளவில், கோவை, சின்னியம்பாளையத்திலுள்ள ‘பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில்’ நடைபெற உள்ள கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன். அந்த நாள் எப்போது வருமென ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உங்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் நிச்சயம் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. மக்களைச் சந்திப்போம், உங்களோடு நானும் வருகிறேன். புதிய சரித்திரம் படைக்க புறப்படட்டும் இதயதெய்வம் அம்மா அவர்களின் இந்தப் படை. “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் ஆயத்தமாவோம்!’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்