அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது – சசிகலா அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரியும்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்தும் சசிகலா வழக்கு முன்னதாக தொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து,சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
உரிமையியல் நீதிமன்றம் போட்ட உத்தரவு:
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனையடுத்து,சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக சசிகலா அறிவித்திருந்தார்.
அரசியல் பயணத்திற்கான நேரம்:
இந்நிலையில்,1996 ஆம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருவதாகவும்,இந்த வழக்கு தனக்கு புதிதல்ல என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா கூறியுள்ளார்.அதே சமயம்,தனக்கு எந்த அரசியல் நெருக்கடி இல்லை என்றும், அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சசிகலா உறுதி:
மேலும்,கொங்கு மண்டலம் சென்றபோது மக்கள் தன்னை நல்ல முறையில் வரவேற்றார்கள்.அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.குறிப்பாக,தன்னைப் பொறுத்தவரை அதிமுக ஒருங்கிணைந்து பெரிய அளவில் வரவேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்றும், அதை தான் நிச்சயமாக செய்து முடிப்பதாகவும் சசிகலா உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஆன்மீகப் பயணம்:
இதனைத் தொடர்ந்து பேசிய சசிகலா,ஆன்மீகப் பயணம் என்று சென்றால் கூட கழக தொண்டர்கள் என்னை விடவில்லை,எனவே, இனிமேல் அரசியல் பயணம் தொடங்கி விடும்.அதற்கான நேரம் வந்து விட்டது”,என்று தெரிவித்துள்ளார்.