அண்ணாமலையாரை தரிசிக்க இனி இந்த சான்றிதழ் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவண்ணாமலை:இன்று முதல் அண்ணாமலையாரை தரிசிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
அதன்படி,2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும்,இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.