தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்! – பாமக

Anbumani Ramadoss

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட 2023 மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இந்த சட்ட மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் அன்றைய தினமே தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கும். இந்த சட்டம் மூலம், நீர்நிலைக்கு அருகில் தொழில்துறை திட்டத்தை செயல்படுத்த சிறப்பு திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். 100 ஹெக்டேருக்கு குறையாத நிலத்தில் நீர்நிலை இருந்தாலும் அந்த பகுதியில் தொழில்துறை திட்டம் தொடங்க இந்த சட்டம் வழிவகை செய்யும்.

இந்த நிலையில், நீர்நிலைகளை காக்க தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்ட முன்வரைவுக்க தமிழக ஆளுனர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து கடந்த 17ம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் இந்த சட்டம் தேவையற்றது; தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நீர்நிலைகளுடன் கூடிய நிலங்களை தாரை வார்க்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. தமிழக சட்டப்பேரவையில் இந்த முன்வரைவு நிறைவேற்றப்பட்ட போதே அதற்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன். தமிழ்நாட்டின் நீர்வளத்தையும், வேளாண்மையையும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய இந்த சட்டம் பேரவையில் எந்த விவாததும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை அவசர, அவசரமாக நிறைவேற்றியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. நிலங்கள் பல்வேறு வகையான சட்டங்களால் ஒருங்கிணைக்கப்படுவதால், சிறப்புத் திட்டங்களுக்காக பல்வேறு வகையான நிலங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதை கருத்தில் கொண்டு தான் இத்தகைய சட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இந்த விளக்கத்தை ஏற்க முடியாது. அரசுக்கும், மக்களுக்கும் சொந்தமான நிலங்களை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது.

இந்த சட்டத்தின்படி, 100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து அந்த இடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு குறைக்கப்படமாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் சில நடைமுறைகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுடன், தனியார் நிலங்களை ஒட்டியுள்ள ஏரி, குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ஆளுனரின் ஒப்புதலைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்த சட்டத்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தின் நீர்நிலைகள் காணாமல் போய்விடும். தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மொத்தம் 41,127 ஏரிகள் இருந்தன. அவற்றின் மொத்தக் கொள்ளளவு 347 டி.எம்.சி.

இது தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி அணை, சாத்தனூர் அணை, அமராவதி அணை, தென்பெண்ணையாறு அணை உள்ளிட்ட அனைத்து அணைகளின் கொள்ளளவை விடவும் அதிகம் ஆகும்.  ஆனால், அவற்றில் சுமார் 15 ஆயிரம் ஏரிகள் இப்போது என்ன ஆயின என்பதே தெரியவில்லை. இப்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளன. குறைந்தபட்சம் இந்த நீர்நிலைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest