ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஜெயலலிதா காட்டிய முனைப்பை தமிழக அரசு கடைப்பிடிக்க முன்வர வேண்டும் – சீமான்

Default Image

 7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து  அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது.இந்த சட்டம்  அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.சுமார் 40 நாட்களுக்கு  மேல் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.பின்பு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக மருத்துவ இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் வகையில் 162வது சட்டப்பிரிவின்படி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கனவிற்கு வாசல்திறந்து விடும் வகையிலான இச்செயல்பாடு சற்றே ஆறுதளிக்கக்கூடிய நல்லதொரு முன்நகர்வாகும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 விழுக்காடு வழங்கிட தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இத்தோடு, 30 ஆண்டுகளாய் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கோப்பில் கையெழுத்திட ஆளுநர் மறுத்து வரும் நிலையில் தமிழக அரசு இவ்விவகாரத்தில் அம்மையார் ஜெயலலலிதா காட்டிய முனைப்பையும், உறுதிப்பாட்டையும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும். எழுவர் விடுதலைக்காக தமிழகச்சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளைக் கடந்தும் அவர்களை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் கையெழுத்திட மறுப்பது சனநாயகத்தைச் சாகடிக்கும் பச்சைப்படுகொலையாகும். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட தமிழக அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து நிறுத்துவதென்பது மக்களாட்சித்தத்துவத்திற்கே எதிரானதாகும். சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீகத்தின் அடிப்படையிலும் விடுதலைக்கான முழுத்தகுதியையும் கொண்டிருக்கிற ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய மறுப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும். எழுவரையும் விடுவிக்க வேண்டும் என்பது உலகெங்கும் 12 கோடித் தமிழ்த்தேசிய இன மக்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஆகவே, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சட்டத்தின்படி இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி 161வது சட்டப்பிரிவின்படி எழுவர் விடுதலையை உடனடியாகச் சாத்தியமாக்க வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்