தமிழக மாணவர்களை மீட்க ரூ.14 லட்சம் பேருந்து கட்டணம் செலுத்திய தமிழக அரசு!
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,,உக்ரைனின் நான்கு நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.அதன்படி,தலைநகர் கீவ்,கார்கிவ்,மரியபோல் மற்றும் சுமி நகரங்களில் ஆகிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.அதே சமயம்,ரஷ்யா – உக்ரைன் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் பெலாரசில் இன்று நடைபெற உள்ளது.
இதனிடையே,மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,நேற்று இரவு வரை 15,920 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி,உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்களை அழைத்து வர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெல்லி வந்தடையும் மாணவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடியும், மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் , சிறப்பு குழுவுக்கான பயணசெலவுக்கு ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.3.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.மேலும்,இந்த நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில்,உக்ரைனில் இருந்து 35தமிழக மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து செல்வதற்கான பேருந்து கட்டணமான ரூ.14 லட்சத்தை தமிழக அரசு செலுத்தியுள்ளது.
உக்ரைனின் அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பயன்படுத்தி,போர் சூழல் நிலவி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள 35 தமிழக மாணவர்களை நேற்று முன்தினம் அங்கிருந்து இருந்து அண்டை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான பேருந்து கட்டணமான சுமார் ரூபாய் 14 லட்சத்தை(17,500 டாலர்கள்) தமிழக அரசே செலுத்தியுள்ளது.