தமிழக அரசிடம் 50 ஆண்டுகளாக தொலைநோக்கு திட்டம் இல்லை – எல்.முருகன்
அம்பத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தபின் மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி.
தமிழகத்தில் மழைநீரை சேமிக்கும் தொலைநோக்கு திட்டம் 50 ஆண்டுகளாக இல்லாதது வேதனை அளிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்து அம்பத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல் முருகன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைநீர் தேங்கும் பிரச்சனை 50 ஆண்டுகளாகவே உள்ளது. தொலைநோக்கு திட்டம் இல்லாதது வேதனை அளிக்கிறது.
முன்கூட்டியே வடிகால்களை தூர்வாரி இருந்தால் மழைநீர் தேங்காமல் கடலுக்கு சென்று இருக்கும். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது ஸ்டாலின் உரிய திட்டங்களை தீட்டியிருந்தால் இன்று இதுபோன்ற சூழல் ஏற்பட்டிருக்காது. திமுக, அதிமுக ஆகியவை குற்றம்சாட்டுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.